செய்திகள்

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி: அரசு மரியாதையுடன் விமானப்படை முன்னாள் தளபதி உடல் நாளை அடக்கம்

Published On 2017-09-17 10:06 GMT   |   Update On 2017-09-17 10:06 GMT
விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் நாட்டுக்கு ஆற்றிய அரிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவுள்ளது.
புதுடெல்லி:

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அர்ஜன் சிங். 98 வயதான அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

டெல்லியில் உள்ள கவுட்டில்யா மார்க் பகுதியில் உள்ள அர்ஜன் சிங் வீட்டுக்கு இன்று காலை அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று அர்ஜன் சிங் வீட்டுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள அர்ஜன் சிங்கின் உடலுக்கு மலர் வளையல் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், அர்ஜன் சிங்கின் உறவினர்களுக்கு ஆறுதல்
கூறினர்.

ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன், இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங், கடற்படை தளபதி சுனில் லான்பா, ராணுவ தளபதி பிப்பின் ராவத் மற்றும் முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி
செலுத்தினர். தொடர்ந்து பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அர்ஜன் சிங் நாட்டுக்கு ஆற்றிய அரிய சேவையை கவுரவிக்கும் வகையில் திங்கட்கிழமையன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News