செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய மத தலைவருக்கு ரூ.1.12 கோடி பரிசாக வழங்கிய 3 பா.ஜனதா மந்திரிகள்

Published On 2017-08-26 09:59 GMT   |   Update On 2017-08-26 09:59 GMT
கற்பழிப்பு வழக்கில் சிக்கிய மத தலைவருக்கு ரூ.1.12 கோடி பரிசாக வழங்கிய 3 பா.ஜனதா மந்திரிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
சண்டிகார்:

கற்பழிப்பு வழக்கில் ‘தேரா சச்சா சவுகா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை ஏற்பட்டது.

குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி மனோகர் லால் கட்டா தலைமையில் உள்ள மந்திரிகளில் 3 பேர் தேரா சச்சா சவுகா அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளனர்.

ராம்பிலாஸ் சர்மா, அனில் விஜி, குரோவர் ஆகிய 3 மூத்த மந்திரிகள் இணைந்து குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு ரூ.1.12 கோடி பரிசாக வழங்கி இருந்தனர்.

கல்விதுறை மந்திரியான ராம் பிலாஸ் சர்மா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரடியாகவே கற்பழிப்பு வழக்கில் சிக்கிய மத தலைவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர். பொது மக்கள் முன்னிலையில் அவர் குர்மீத் ராம் சிங்குக்கு ரூ.51 லட்சத்துக்கான காசோலையை சமீபத்தில் வழங்கினார். பிறந்த நாளையொட்டி அவர் பரிசாக இதை வழங்கினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுகாதாரம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனில்விஜி தேரா சச்சா சவுதா அமைப்புக்கு ரூ.150 லட்சம் வழங்கினார். உடனே மந்திரியான மனிஷ் குரோவர் ரூ.11 லட்சம் வழங்கி குர்மீத் ராம் சிங்கிடம் ஆசி பெற்று இருக்கிறார்.

பா.ஜனதா மந்திரிகள், நிர்வாகிகள், கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மத தலைவருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இது மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்றாகும். நடவடிக்கை எடக்க வேண்டிய மந்திரிகளே அவருடன் தொடர்பில் இருந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News