செய்திகள்

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தால் நீண்டகாலம் நிலைக்காது: டி.டி.வி.தினகரன்

Published On 2017-08-19 03:41 GMT   |   Update On 2017-08-19 03:41 GMT
சுயநலம் மற்றும் பதவி ஆசைக்காகவே அறிவித்துள்ளதால் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தாலும் நீண்டகாலம் நிலைக்காது என்று சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு டி.டி.வி.தினகரன் கூறினார்.
பெங்களூரு:

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவான பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மதியம் 12.38 மணிக்கு சசிகலாவை அவரது பிறந்த நாளையொட்டி சிறையில் சந்தித்தார்.

அவருடன் அவரது மனைவி அனுராதா மற்றும் மகள், புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன், அன்பழகன் எம்.எல்.ஏ.(புதுச்சேரி), சோழிங்கர் எம்.எல்.ஏ. பார்த்திபன், குடியாத்தம் எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரும் சிறைக்குள் சென்றனர். அங்கு சசிகலாவை சந்தித்த அவர்கள் மதியம் 2.30 மணிக்கு வெளியே வந்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 2 அணிகளும் சுயநலம் மற்றும் பதவி ஆசைக்காகவே இணைவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எதுவும் நடக்கவில்லை.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் 1987-ல் இரண்டாக பிரிந்த அ.தி.மு.க. மீண்டும் 1989-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் இணைந்தன. அப்போது 2 அணிகளும் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப இணைந்தன. அது இயற்கையானது. இப்போதுள்ள சூழ்நிலையில் 2 அணிகளும் தொண்டர்கள் விருப்பத்திற்கு எதிராக உள்ளன. இப்படி இருக்கும் நிலையில் இரு அணிகளும் இணைந்தால் அது நிலைக்காது. நீண்டகாலத்திற்கு அவர்களால் இணைந்திருக்க முடியாது. இந்த முடிவால் எனக்கு எந்த பின்னடைவும் இல்லை.

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கி அதை பொதுமக்கள் பார்வைக்குவிட முடிவு செய்திருப்பது நல்ல முடிவுதான். ஆனால் அதற்கு முன்பு அவர் உயில் ஏதும் எழுதிவைத்துள்ளாரா? என்பது குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து சட்ட ஆலோசகரிடம் உரிய ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.

தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தை ஏற்று ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்க முடிவு செய்திருப்பதாக நான் கருதவில்லை. இது அவசர கதியில் எடுத்த முடிவு. சிலர் தங்களது பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவசர கதியில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் சரியாக அமையாது. இந்த விஷயத்தை அரசு கவனமாக அணுக வேண்டும்.

மதுரை மேலூர் கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நானும் கோரிக்கை விடுத்திருந்தேன். அப்படி விசாரணை நடந்தால் தான் சசிகலா குற்றமற்றவர் என்று தெரியவரும். இப்போது நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். நீதி விசாரணை நியாயமாக நடந்தால் முழுஒத்துழைப்பு கொடுக்கப்படும்.

விசாரணையின் முடிவில் சசிகலா குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும். அவர் சொக்கத்தங்கமாக வெளியே வருவார்.

கட்சியில் செய்ய இருக்கும் ‘ஆபரேஷன்’ தொடர்பாக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினேன். விரைவில் ‘ஆபரேஷன்’ இருக்கும். அதை நீங்களே பார்ப்பீர்கள்.

எனக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள். சிலர் ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ மாதிரி இருக்கிறார்கள். எத்தனை பேர் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் தேவைப்படும்போது பலத்தை நிரூபித்து காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இளவரசியின் மகன் விவேக், அவருடைய சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்பட 5 பேர் சிறையில் இளவரசியை தனியாக சந்தித்து பேசினர்.
Tags:    

Similar News