செய்திகள்

அசாமில் பெருவெள்ளம்: காசிரங்கா வன விலங்கு காப்பகத்தில் 140 வன விலங்குகள் பலி

Published On 2017-08-18 08:55 GMT   |   Update On 2017-08-18 08:55 GMT
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் புகழ்பெற்ற வனவிலங்கு காப்பகமான காசிரங்கா தேசியப் பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 140 வன விலங்குகள் பலியாகியுள்ளன.
கவுகாத்தி:

அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக இங்குள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கின்றது. இதனால், இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. வெள்ள நீரில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய பாலங்கள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோல்காட் மற்றும் நகவுன் மாவட்டங்களை ஒட்டியுள்ள புகழ்பெற்ற வனவிலங்கு காப்பகமான காசிரங்கா தேசியப் பூங்கா முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அங்கு பராமரிக்கப்பட்டுவரும் விலங்குகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.



சுமார் 500 சதுர கிலோமீட்டர் அளவுள்ள இந்த பூங்காவின் 80 சதவீதம் பகுதியை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இந்த வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம், புலி, அரியவகை ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் போன்றவை வெள்ளத்தில் மூழ்கி இறக்கவும், வெள்ள நீரில் நீந்தியபடி, அருகாமையில் உள்ள ஊர்களுக்குள் புகுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பத்தாம் தேதியில் இருந்து சில நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி இரு யானைகள், 10 காண்டா மிருகங்கள், 120-க்கும் மேற்பட்ட சதுப்பு மான்கள், காட்டெருமைகள், முள்ளம்பன்றி உள்பட 140 வன விலங்குள் உயிரிழந்ததாக காசிரங்கா வன விலங்கு காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இறந்த விலங்குகளின் உடல்கள் அவ்வப்போது அகற்றி, அடக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Tags:    

Similar News