செய்திகள்

டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் சரத்யாதவ் இன்று ஆலோசனை

Published On 2017-08-16 22:01 GMT   |   Update On 2017-08-16 22:01 GMT
டெல்லியில் பன்முக கலாசாரத்தை காப்போம் என்னும் நிகழ்ச்சியை சரத்யாதவ் இன்று நடத்துகிறார். இதில் கலந்து கொள்ள சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
புதுடெல்லி:

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்ததை மூத்த தலைவர் சரத்யாதவ் கடுமையாக எதிர்த்தார்.

இதனால் டெல்லி மேல்-சபை ஐக்கிய ஜனதாதளம் தலைவர் பதவியில் இருந்து அவரை நிதிஷ்குமார் நீக்கினார். இதேபோல் கட்சியின் பொது செயலாளர் அருண் ஸ்ரீவத்சவாவும் நீக்கப்பட்டார். காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற அலி அன்வர் அன்சாரி எம்.பி.யும் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பன்முக கலாசாரத்தை காப்போம் என்னும் நிகழ்ச்சியை சரத்யாதவ் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடத்துகிறார். இதில் கலந்து கொள்ளும்படி சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, லாலுபிரசாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து இருக்கிறார். அப்போது பா.ஜனதாவை எதிர்ப்பது குறித்து அவர் தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியின்போது தனக்கு ஐக்கிய ஜனதாதளத்தில் உள்ள தலைவர்களின் ஆதரவையும் சரத்யாதவ் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“நமது கலாசாரம் பன்முகத்தன்மையின் கீழ் அமைந்து ஆகும். எனவே நாட்டு மக்களின் நலனுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்” என்று சரத்யாதவ் தெரிவித்தார். 
Tags:    

Similar News