செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி-தலைவர்கள் வாழ்த்து

Published On 2017-08-05 14:37 GMT   |   Update On 2017-08-05 14:37 GMT
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ந் தேதி நிறைவடைய உள்ள நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரியான வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகின. இதில், 11 வாக்குகள் செல்லாதவை. வெங்கையா நாயுடு, 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருநாவுக்கரசர், தமிழிசை சவுந்தரராஜன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ். ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெங்கையா நாயுடுவை எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனக்காக வாக்களித்த அனைவருககும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஆதரவளித்த பிரதமர் மற்றும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு, குடியரசு தலைவரின் கரத்தை வலுப்படுத்த படுபடுவேன் என உறுதி அளித்துள்ளார்.
Tags:    

Similar News