செய்திகள்

பஸ்சில் தலையை வெளியில் நீட்டிய தமிழக பள்ளி சிறுவன் பரிதாப பலி

Published On 2017-04-27 08:01 GMT   |   Update On 2017-04-27 08:01 GMT
திருவனந்தபுரம் அருகே பஸ்சின் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி வாந்தி எடுத்த போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் தலை மோதியது. இதில் சிறுவன் பரிதாமாக பலியானார்.
திருவனந்தபுரம்:

நீலகிரி மாவட்டம் பூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் சிபி (வயது 13).

அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சிபி 7-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி கோடை விடுமுறையையொட்டி மாணவன் சிபியை அவரது உறவினர் ஒருவர் அழைத்துக் கொண்டு கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதியில் வசிக்கும் இன்னொரு உறவினர் வீட்டிற்கு பஸ்சில் அழைத்துச் சென்றார்.

கண்ணூர் பகுதியில் அவர்கள் சென்ற பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது உடல்நலக்குறைவு காரணமாக மாணவர் சிபிக்கு வாந்தி ஏற்பட்டதால் அவர் பஸ்சின் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி வாந்தி எடுத்தார்.

அப்போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் சிபியின் தலை மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சிபி பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர் கதறி அழுதது பஸ்சில் இருந்த மற்ற பயணிகளை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News