செய்திகள்

ரேசன் கடையில் பயங்கர தீ விபத்து: 14 பேர் உயிரிழப்பு

Published On 2017-04-21 14:58 GMT   |   Update On 2017-04-21 14:58 GMT
மத்திய பிரதேசத்தில் இன்று ரேசன் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் ஹராய் கி பார்கி கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் இன்று மாலை குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. எனவே, மண்எண்ணெய் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் வரிசையில் நின்றிருந்தனர்.  

அப்போது மண்எண்ணெய் ஊற்றும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மண்எண்ணெய் பேரலும் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இதனால் கடை முழுவதும் பற்றி எரிந்தது. கடைக்குள் வரிசையில் நின்ற பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் நெருப்பில் சிக்கிக்கொண்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 


இதில், 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர்  சிவராஜ்சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News