செய்திகள்

உத்தரபிரதேச போலீஸ் நிலையத்தில் பெண் சுட்டுக்கொலை

Published On 2017-04-19 05:40 GMT   |   Update On 2017-04-19 05:40 GMT
உத்தரபிரதேச போலீஸ் நிலையத்தில் பாதுகாப்புக்கு தஞ்சம் அடைந்த பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மீரட்:

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி என்ற இடத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும், இன்னொரு தரப்புக்கும் இடையே நில தகராறு இருந்து வந்தது.

எதிர் தரப்பினர் அனிஷாவை தாக்குவதற்கு வந்தனர். எனவே, உயிருக்கு பயந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி ஆக்ரா சவுக்கி கேட் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

ஆனால், அந்த போலீஸ் நிலையத்தில் குறைவான போலீஸ்காரர்களே இருந்தனர். ஆனால், அனிஷாவை விரட்டி வந்தவர்களில் பெரிய கும்பலே இருந்தது. அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

போலீஸ் நிலையத்துக்குள்ளேயே புகுந்து அனிஷாவை தாக்கினார்கள். மேலும் அனிஷாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.



இது தொடர்பாக வாசிம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தவரையே போலீசார் காப்பாற்ற முடியாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல் மீரட்டில் பல்கலைக்கழகம் முன்பு ரிஷூ என்ற 20 வயது பெண்ணை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. அதே போல் மீரட்டில் மரினா பகுதியில் விவசாய ஒருவரின் மகளை ஒரு கும்பல் கடத்தி சென்றது.

உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து இருப்பதால் ஆதித்யநாத் ஆட்சி மீது எதிர்க்கட்சியினர் புகார் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக மீரட் தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ரபீக் அன்சாரி கூறும் போது, ஆதித்யநாத் அரசால் குற்றங்களை தடுக்க முடியவில்லை என்று கூறினார்.

Similar News