செய்திகள்

சைக்கிள்கள் வழங்கி மாணவிகளிடம் ஓட்டு கேட்ட சந்திரபாபு நாயுடு

Published On 2017-04-18 06:11 GMT   |   Update On 2017-04-18 06:12 GMT
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பெற்றோர், அக்கம் பக்கத்தினரிடம் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

நகரி:

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் வாக்குறுதியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். ஆட்சிக்கு வந்து 2½ ஆண்டுக்கு பிறகு அத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்கான விழா விஜய வாடாவில் உள்ள பள்ளியில் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி பேசினார்.

அப்போது, அவர் தனது கட்சி (தெலுங்கு தேசம்) சின்னமான சைக்கிளுக்கு மாணவிகளிடம் ஓட்டுபோட கூறி ஆதரவு கேட்டார்.

அவர் பேசுகையில், உங்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால் பெற்றோர், அக்கம் பக்கத்தினரிடம் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்றார்.

பின்னர் அதை பெற்றோரிடம் எப்படி வலியுறுத்த வேண்டும் என்று மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.

விழாவில் மாணவிகள், சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகள் கேட்டனர்.

அப்போது ஒரு மாணவி, ஊழல் நிறைந்து காணப்படுகிறதே என்று கேட்டார். அதற்கு சந்திரபாபு நாயுடு நேரடியாக பதில் கூற முடியாமல் திணறினார்.

பள்ளி விழாவில் மாணவிகளுக்கு படிப்பு பற்றி அறிவுரை கூறாமல் தனது கட்சிக்கு சந்திரபாபு நாயுடு ஓட்டு கேட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளனர்.

Similar News