செய்திகள்

மத்திய அரசுக்கு கருப்பு பண பதுக்கல் பற்றி 38 ஆயிரம் ரகசிய தகவல்கள்

Published On 2017-04-16 21:06 GMT   |   Update On 2017-04-16 21:06 GMT
கடந்த 7-ந் தேதி வரை கருப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்து மொத்தம் 38 ஆயிரத்து 68 ரகசிய தகவல்கள் மத்திய அரசின் இ-மெயில் முகவரிக்கு வந்தன
மும்பை:

கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றி பொதுமக்கள் மத்திய அரசின் இணையதளத்தில் ரகசிய தகவல் தரலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து இருந்தது. இதுபற்றி மும்பையை சேர்ந்த ஜிதேந்திர காட்கே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த அந்த வாரியம், “கடந்த 7-ந் தேதி வரை கருப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்து மொத்தம் 38 ஆயிரத்து 68 ரகசிய தகவல்கள் மத்திய அரசின் இ-மெயில் முகவரிக்கு வந்தன. இதில் சுமார் 16 சதவீத(6,050) இ-மெயில் மேல் விசாரணைக்காக வருமான வரித்துறையின் சம்பந்தப்பட்ட தலைமை இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள இ-மெயில்கள் மீது எவ்வித விசாரணை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடித்து வைக்கப்பட்டது” என்று கூறியது.

இதேபோல் காட்கே, ரிசர்வ் வங்கியிடம் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று கேட்டு இருந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறி ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மறுத்துவிட்டது.

Similar News