செய்திகள்

சி.பி.எஸ்.இ. 7-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அழகான பெண்ணின் உடல் வடிவமைப்பு பற்றிய கருத்தால் சர்ச்சை

Published On 2017-04-12 19:31 GMT   |   Update On 2017-04-12 19:31 GMT
சி.பி.எஸ்.இ. 7-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அழகான பெண்ணின் உடல் வடிவமைப்பு பற்றிய கருத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. 7-ம் வகுப்பு பாட திட்டத்தில் டாக்டர் வி.கே.சர்மா எழுதிய சுகாதாரம் மற்றும் உடற்கல்வி (ஹெல்த் அண்ட் பிசிகல் எஜூகேசன்) என்ற புத்தகம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தை சி.பி.எஸ்.இ.யின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகள் கற்பித்து வருகின்றன.

இதில், ‘உடற்கூறும், விளையாட்டும்’ என்ற அத்தியாயத்தில் உடல் வடிவமைப்பு பற்றி குறிப்பிடுகையில், ‘36-24-36’ கொண்டவர்கள்தான் அழகிய வடிவமுள்ள பெண்கள் ஆவர். அதனால்தான் உலக அழகிப்போட்டி, பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு இந்த வடிவமைப்பிலான பெண்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

பெண்களை பற்றிய இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு வேகமாக பரவி வருகிறது. பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். உடனடியாக இந்த பாடப் பகுதியை புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி சி.பி.எஸ்.இ. விடுத்த அறிக்கையில், “தனிப்பட்ட பதிப்பகத்தினர் வெளியிடும் எந்த புத்தகத்தையும் நாங்கள் சிபாரிசு செய்வது இல்லை. சாதி, சமூகம், மதம், பாலினம் பற்றி புண்படுத்தும் விதமாக எந்த கருத்தும் பாடப்புத்தகத்தில் இடம்பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே இதுபோன்ற புத்தகங்களை பாடத் திட்டத்தில் சேர்க்கும்போது, பள்ளிகள்தான் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்” என்று விளக்கம் அளித்து இருக்கிறது. 

Similar News