செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட திரிணாமுல் காங். எம்.பி.

Published On 2017-04-07 14:22 GMT   |   Update On 2017-04-07 14:22 GMT
ஏர் இந்தியா அதிகாரியை தாக்கியதால் சர்ச்சையில் சிக்கிய சிவ சேனா எம்.பி.யின் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மேலும் ஒரு எம்.பி ஏர் இந்தியா விமானத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் இருந்து இன்று கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி டோலா சென் பயணம் செய்தார். அவர் தனது இருக்கையில் அமர்ந்தார். எம்.பி.யின் வயதான தாயார் விமானத்தின் அவசர வழி அருகே உள்ள இருக்கையில் இருந்தார். அவரை வேறு இருக்கையில் மாறி இருக்குமாறு விமான பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த எம்.பி டோலா சென் விமான பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளார். பாதுகாப்பு விதிமுறைகளை எம்.பி. பின்பற்ற மறுத்ததால் ஏர் இந்தியா விமானம் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன மேலாளரை சிவசேனா கட்சியின் எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தாக்கியதால் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது. அவர் மன்னிப்பு கேட்டதையடுத்து, இன்றுதான் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில், கெய்க்வாட் மீதான தடை இன்று நீக்கப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு எம்.பி. ஏர் இந்தியா விமானத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News