செய்திகள்
கைதான உதுப் வர்க்கீஸ்

ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கேரள தொழிலதிபர் கைது

Published On 2017-03-30 06:14 GMT   |   Update On 2017-03-30 06:14 GMT
வெளிநாட்டில் நர்சு பணிக்கு அரசு அறிவித்த சேவை கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலித்தது மூலம் ரூ.300 கோடிக்கு ஊழல் செய்த கேரள தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் இருந்து வளைகுடா நாடான குவைத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நர்சுகளை வேலைக்கு அனுப்பிவைக்க கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

அந்த நிறுவனம், தேர்வு செய்யும் நர்சுகளிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ. 19 ஆயிரத்து 500 மட்டுமே பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் கேரள நர்சுகளை குவைத் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியமர்த்த ரூ.19½ லட்சம் வசூலித்தது.

இது போல ரூ.19½ லட்சம் வழங்கிய ஒரு நர்சுக்கு, இந்த நிறுவனம் குவைத் அரசு ஆஸ்பத்திரியில் பணியமர்த்த ஏற்பாடு செய்யவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை இது பற்றி அந்த நர்சு போலீசில் புகார் செய்தார். அதில் தனியார் நிறுவனம் ஒவ்வொரு நர்சுகளிடமும் ரூ. ரூ.19½ லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றுவதாகவும், இது போல பலரிடமும் பண மோசடி செய்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இது பற்றி அந்த நர்சு குடியேற்றத்துறை அதிகாரிகளிடமும் புகார் மனு கொடுத்தார். அவர்களும் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் வருமான வரித்துறையினர் அந்த நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பல கோடி பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் அந்த நிறுவனம் அரசு அறிவித்த சேவை கட்டணத்திற்கு பதில் கூடுதலாக பணம் வசூலித்து இருப்பதும் தெரிய வந்தது. இதன் மூலம் ரூ.300 கோடி வரை ஊழல் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு குடியேற்றத்துறை அதிகாரி அடால்பஸ் என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நிறுவன உரிமையாளர் உதுப் வர்க்கீஸ் மீதும் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

அதற்குள் உதுப் வர்க்கீஸ் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் உதுப் வர்க்கீஸ் தனக்கு முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் மனுசெய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி ஆனதை தொடர்ந்து உதுப் வர்க்கீசை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்காக சர்வதேச போலீசாரின் உதவியும் கோரப்பட்டது.



இந்த நிலையில் உதுப் வர்க்கீஸ் வளைகுடா நாட்டில் இருந்து நேற்று கேரளாவுக்கு வருவது தெரிய வந்தது. தகவல் அறிந்த சி.பி.ஐ. போலீசார் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அதிகாலையில் வந்திறங்கிய உதுப் வர்க்கீசை சி.பி.ஐ. அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்தனர். உடனடியாக அவரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் அவரை 2 நாள் காவலில் எடுக்க மனு செய்தனர். ஆனால் நீதிபதி அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்

Similar News