செய்திகள்

நாரதா ஊழல் வழக்கில் மம்தா பானர்ஜியையும் விசாரியுங்கள்: இடதுசாரிகள் கோரிக்கை

Published On 2017-03-29 23:52 GMT   |   Update On 2017-03-29 23:52 GMT
நாரதா ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில இடதுசாரிகள் முன்னணி வலியுறுத்தி உள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஆளும் திரிணாமுல் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரபல தொழிலதிபர்களிடம் பணம் வாங்கியதை மறைந்திருந்து வீடியோவாக பதிவுசெய்த ‘நாரதா’ செய்தி நிறுவனம் அந்த காட்சிகளை அப்போது வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரிக்க அம்மாநில ஐகோர்ட் கடந்த மார்ச் 17-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, நாரதா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். இதனால், திரிணாமூல் காங்கிரஸ் தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், நாரதா ஊழல் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியையும் விசாரிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஊழலில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சூர்யா காந்த் மிஸ்ரா தெரிவித்தார்.

Similar News