செய்திகள்

பெண் உயிரோடு எரித்து கொலை: கிராம தலைவர் உள்பட 10 பேர் மீது புகார்

Published On 2017-03-28 08:33 GMT   |   Update On 2017-03-28 08:33 GMT
சாலை விரிவாக்கத்தை எதிர்த்ததால் பெண் எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கிராம தலைவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜோத்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது ஹரியத்னா கிராமம். இந்த ஊரில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.

இந்த பணிக்காக லலிதா (வயது 27) என்ற பெண்ணின் விவசாய நிலத்தையும் கையகப்படுத்தினார்கள். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லலிதா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் கோபம் அடைந்த ஊர் மக்கள் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில், உடல் முழுவதும் கருகிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிர் இழந்தார்.

இது தொடர்பாக லலிதாவின் சகோதரர் வித்யாதர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், கிராம தலைவர் ரன்வீர்சிங் உள்ளிட்ட 10 பேர் லலிதாவை தீ வைத்து கொன்றதாக கூறி இருக்கிறார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் உதவி சூப்பிரண்டு நர்பத்சிங் கூறியதாவது:-

லலிதாவை 10 பேர் எரித்து கொன்றதாக அவரது சகோதரர் புகார் கொடுத்து இருக்கிறார். ஆனாலும், உண்மையிலேயே எரித்து கொன்றார்களா? என்பது பற்றி இதுவரை எங்களுக்கு உரிய தகவல் கிடைக்கவில்லை. தீவிர விசாரணைக்கு பிறகே இறுதி முடிவு எடுக்க முடியும்.

எங்களுக்கு கிடைத்த ஆரம்ப கட்ட தகவல்படி அந்த பெண் தானாகவே தீக்குளித்து இருக்கிறார். ஆனால், இப்போது எரித்து கொன்று விட்டதாக கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News