செய்திகள்

மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றால் குற்றம் ஆகாது: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

Published On 2017-03-27 22:14 GMT   |   Update On 2017-03-27 22:14 GMT
‘மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றால் குற்றம் ஆகாது’ என்பது குறித்து பாராளுமன்றத்தில் மனநல சுகாதார பாதுகாப்பு மசோதா நிறைவேறியது
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த மனநல சுகாதார பாதுகாப்பு மசோதா கடந்த ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதமே டெல்லி மேல்-சபையில் நிறைவேறி விட்டது.

இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தற்போதுள்ள, மனநல சுகாதார பாதுகாப்பு சட்டத்தில் யாராவது ஒருவர் தற்கொலைக்கு முயன்றால் அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படுகிறது. புதிய மசோதாவில் கடுமையான மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை விதிப்பதை இந்த சட்டம் தடுக்கிறது. மேலும், மனநலம் பாதித்தவர்களுக்கு அரசு சார்பில் தரமான சிகிச்சை கிடைக்கவும், ஒருவர் தனக்கு மன நலம் பாதிக்கப்பட்டால் எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்கிற உரிமையை அவருக்கு வழங்கிடவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறுகையில், “1987-ம் ஆண்டு இதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட மசோதா சிகிச்சை நிறுவனத்தை மையமாக கொண்டிருந்தது. தற்போதைய சட்ட மசோதா மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மையமாக கொண்டது” என்று குறிப்பிட்டார். 

Similar News