செய்திகள்

உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட ஜாதி போலீசாரை முதல்-மந்திரி பழிவாங்குகிறார்: அகிலேஷ் குற்றச்சாட்டு

Published On 2017-03-26 07:07 GMT   |   Update On 2017-03-26 07:07 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு குறிப்பிட்ட ஜாதி போலீசாரை பழிவாங்குவதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் லக்னோவில் நடந்தது. கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமை தாங்கினார். கட்சியின் நிறுவன தலைவர் முலாயம்சிங் பங்கேற்கவில்லை. கூட்டம் முடிந்ததற்கு பிறகு அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய முதல்-மந்திரி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஜாதி ரீதியாக நடந்து கொள்கிறது. குறிப்பிட்ட ஜாதியினரை அவர்கள் பழி வாங்குகிறார்கள்.

போலீஸ் துறையில் இந்த ஜாதியினர் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் இடமாற்றம் செய்கிறார்கள். அல்லது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்டு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இது நீடிப்பது சரி அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.



உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ஹிமான்சு குமார். சமீபத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இவர் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பற்றி தனது டுவிட்டர் தளத்தில் விமர்சனம் செய்து இருந்தார். அவர்கள் ஜாதி பார்த்து போலீசாரை நடத்துவதாகவும் யாதவ சமூக போலீசாரை பழி வாங்குவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து ஹிமான்சு குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்துள்ளனர்.

இதை குறிப்பிட்டுதான் அகிலேஷ் யாதவ் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

Similar News