செய்திகள்

ம.பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிக்க உதவிய தெலுங்கானா போலீஸ் அதிகாரி

Published On 2017-03-26 04:46 GMT   |   Update On 2017-03-26 04:46 GMT
மத்திய பிரதேச மாநிலம் போபால்-உஜ்ஜைனிக்கு சென்ற பாசஞ்சர் ரெயிலில் குண்டு வைத்த தீவிரவாதிகளை தெலுங்கானா போலீஸ் அதிகாரியின் உதவியால் பிடித்தனர்.
புதுடெல்லி:

கடந்த 7-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து உஜ்ஜைனிக்கு சென்ற பாசஞ்சர் ரெயிலில் காலை 10 மணிக்கு குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

ரெயிலில் குண்டு வைத்தவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று தெரிய வந்தது. இது தொடர்பாக குண்டு வெடித்த சில மணி நேரங்களிலேயே டேனிஷ் அக்தர், சையித் மிர் உசேன், அதிப் முசாபர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய வேறு சில தீவிரவாதிகள் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் சுற்றி வளைத்தனர். இதில், சைபுல்லா என்ற தீவிரவாதியை சுட்டு கொன்றனர். மேலும் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

குண்டு வெடித்த சில மணி நேரத்திலேயே தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தெலுங்கானா போலீஸ் அதிகாரி என்று தெரிய வந்துள்ளது. அவர்தான் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பற்றி மத்திய புலனாய்வு படைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மத்தியபிரதேச போலீசுக்கு தகவல் அளித்து அதன் மூலம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த போலீஸ் அதிகாரி யார்? என்ற விவரத்தை வெளியிடவில்லை. இந்த அதிகாரி இந்தியாவில் செயல்படும் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் சம்பந்தமான தகவல்களை தொடர்ந்து திரட்டி வந்தார்.

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் இணையதளங்களுக்கு சென்று யார்- யார் எல்லாம் தகவல் சேகரிக்கிறார்கள் என்பதையும் அவர் ரகசியமாக கண்காணித்தார்.

அப்போதுதான் ரெயில் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் இணையதளங்களில் தகவல் சேகரித்தது தெரிய வந்தது. அவர்கள் லக்னோவில் இருப்பதும் அவருக்கு தெரிந்தது.

எனவே, லக்னோவுக்கே சென்று அவர் தீவிரவாதிகளை ரகசியமாக கண்காணித்து வந்தார். கடந்த 6-ந் தேதி அவர்கள் லக்னோவில் இருந்து போபாலுக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்கள். தெலுங்கானா போலீஸ் அதிகாரியும் அதே ரெயிலில் அவர்களுடன் பயணம் செய்தார். போபாலில் அவர்கள் இறங்கினார்கள். அப்போது அந்த அதிகாரியும் இறங்கினார்.

இடையில் தீவிரவாதிகளில் ஒருவனை ரகசியமாக படம் பிடித்தார். போபாலில் இறங்கிய தீவிரவாதிகள் அங்கு நின்றிருந்த உஜ்ஜைனி பாசஞ்சர் ரெயிலில் வெடிகுண்டை வைத்து விட்டு வந்துள்ளனர்.

ஆனால், இது தெலுங்கானா போலீஸ் அதிகாரிக்கு தெரியாது. அவர்கள் குண்டு வைத்த 1½ மணி நேரத்தில் ரெயிலில் குண்டு வெடித்தது. இது பற்றி தகவல் அறிந்த தெலுங்கானா போலீஸ் அதிகாரி குண்டு வைத்தது இந்த நபர்களாகத்தான் இருக்கும் என கருதி மத்திய உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

மேலும் அவர் படம் பிடித்து வைத்திருந்த தீவிரவாதி ஒருவனின் படத்தையும் அனுப்பினார். உடனே மத்திய உளவுத்துறை மத்தியபிரதேச போலீசுக்கு தகவல் கொடுத்தது.

இதை வைத்து 3 தீவிரவாதிகளையும் போலீசார் வைபரி என்ற இடத்தில் காரில் வந்த போது மடக்கி பிடித்தனர். தெலுங்கானா போலீஸ் அதிகாரியின் உதவியால் முக்கிய தீவிரவாதிகள் கும்பலே பிடிபட்டுள்ளது.

இந்த தீவிரவாதிகள் சிரியாவுக்குள் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர பல முறை முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களால் சிரியா செல்ல முடியவில்லை. காஷ்மீருக்கும் சென்று தீவிரவாதிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

தங்கள் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த ரெயிலில் குண்டு வைத்துள்ளனர். குண்டு தயாரிப்பது எப்படி? என்பது பற்றிய விவரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகளின் இணைய தளத்தில் இருந்து பெற்றுள்ளனர்.

Similar News