செய்திகள்

குஜராத் பயணத்தை ரத்து செய்தார் கெஜ்ரிவால்: டெல்லி மாநகராட்சி தேர்தல் பணிகளில் தீவிரம்

Published On 2017-03-25 12:26 GMT   |   Update On 2017-03-25 12:26 GMT
டெல்லி மாநகராட்சித் தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அகமதாபாத்:

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நாளை ஆம் ஆத்மி கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து 182 தொகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். இதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான தயாரிப்பு பணிகளியில் தீவிரமாக இருப்பதால் கெஜ்ரிவால் தனது குஜராத் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

‘காந்தி நகர் பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்க மாட்டார். டெல்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து இறுதி செய்யும் பணியில் அவர் பிசியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே, நாளை நிகழ்ச்சியானது குஜராத் மாநில பொறுப்பாளர் கோபால் ராய் முன்னிலையில் நடைபெறும்’ என கட்சியின் நிர்வாகி கனு கல்சாரியா தெரிவித்தார்.

டெல்லி மாநகராட்சிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News