செய்திகள்

கச்சத்தீவு வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-03-24 20:54 GMT   |   Update On 2017-03-24 20:54 GMT
கச்சத்தீவை மீட்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
புதுடெல்லி:

கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி, ‘தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்துக்கொள்ளலாம். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழாவில் கலந்து கொள்ளலாம்’ என்று அப்போது மத்திய அரசு விளக்கம் அளித்தது.

ஆனால் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கச்சத்தீவை மீட்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘கச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976-ல் ஏற்படுத்தப்பட்ட இரு ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். மேலும், கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல தி.மு.க. தலைவர் கருணாநிதியும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.



இந்நிலையில், மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், இப்பிரச்சினையில் நிரந்தர தீர்வுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அம்மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், அபய் மனோகர் சப்ரே, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் ஷக்கீல் அஹமது சையத், எல்.பி.மவுரியா ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் தங்கள் வாதத்தில், ‘ஒப்பந்தத்தின் பிரிவு 6-ன் அடிப்படையில் தமிழக மீனவர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறினர்.

இதற்கு நீதிபதிகள், ‘கச்சத்தீவு தொடர்பாக ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதில் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் இறந்ததால் அவரது மனு தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறது. மனுதாரரின் தற்போதைய மனு ஏற்கனவே கருணாநிதி தாக்கல் செய்த மனுவுடன் இணைத்து விசாரிக்கப்படும்’ என்று கூறினர்.

அத்துடன், 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News