செய்திகள்

10 மாதமாக சம்பளம் வழங்காததால் சுகாதார ஆய்வாளர் தற்கொலை

Published On 2017-03-24 05:00 GMT   |   Update On 2017-03-24 05:00 GMT
கேரளாவில் 10 மாதமாக சம்பளம் வழங்காததால் சுகாதார ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காசர் கோடு திருக்கரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 42). இவர் சுகாதாரதுறையில் தற்காலிக ஆய்வாளராக கடந்த 2012 முதல் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஜெகதீசுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இது பற்றி அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் ஜெகதீஷ் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் தனக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பாக்கிக்காக அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை பலரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். ஆனாலும் அவருக்கு சம்பளபாக்கி வழங்கப்பட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள ஒரு லாட்ஜில் ஜெகதீஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனக்கு சம்பளபாக்கி கிடைக்காததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்வதாக அவர் பரபரப்பு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் தம்பானூர் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் அங்கு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் அவர்கள் கேரள அரசு தலைமை செயலகம் முன்பு ஜெகதீஷ் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுகாதாரத்துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் கைவிட்டனர்.

Similar News