செய்திகள்

உ.பி.யில் பா.ஜ.க அரசு எந்த பாகுபாடும் பார்க்கவில்லை - ராஜ்நாத் சிங் விளக்கம்

Published On 2017-03-24 00:15 GMT   |   Update On 2017-03-24 00:15 GMT
உத்தரப்பிரதேசத்தில் எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவாகவே பா.ஜ.க அரசு செயல்படுகிறது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசத்தில் எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவாகவே பா.ஜ.க அரசு செயல்படுகிறது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில காவல் துறையில் ஈவ் டீசிங் செய்பவர்கள், பெண்கள் பின்னால் சுற்றும் இளைஞர்களை பிடிப்பதற்காக ‘ஆன்ட்டி ரோமியோ’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் வாலிபர்களை பிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன், ‘‘உத்தரப் பிரதேசத்தில் சில சமூகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆன்ட்டி ரோமியோ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். மேலும் ,”காதல் வசப்படுவது தவறா? பூங்காங்களில் எப்படி உட்கார வேண்டும் என இளஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் அரசு சொல்லிக் கொடுக்க விரும்புகிறதா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ‘‘ஜாதி, மத ரீதியாக பா.ஜ.க எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து சில நாட்கள்தான் ஆகிறது. இதுபோல் குறிப்பிடும்படியாக ஏதாவது சம்பவம் நடந்திருந்தால் அதுகுறித்து அரசு விசாரிக்கும்.  ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான ஒட்டு மொத்த முயற்சியில் கவனம் செலுத்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். எனவே இது குறித்த கவலை உறுப்பினருக்கு தேவையில்லை’’ எனத் தெரிவித்தார்.

Similar News