செய்திகள்

எதற்கும் தயாராக இருக்க வேண்டும் - முப்படைகளுக்கு தலைமை தளபதி அட்வைஸ்

Published On 2017-03-23 21:57 GMT   |   Update On 2017-03-23 21:57 GMT
எல்லையில் போரை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வீரர்களுக்கு ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

எல்லையில் போரை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வீரர்களுக்கு ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.

ராணுவ தகவல் தொடர்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு புதுடெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த தலைமைத் தளபதி விபின் ராவத் ,” எதிரி நாடுகளிடமிருந்து போர் அச்சுறுத்தல் வந்தால், அது பாரம்பரியப் போர் முறையாக இருந்தாலும், அணு ஆயுதப் போராக இருந்தாலும், அந்தச் சவாலை எதிர்கொள்ளும் ஆற்றம் இந்தியாவிடம் உள்ளது. இந்தியாவின் முப்படைகளும், எல்லைக்கு அப்பாலிருந்து வரும் போர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று பேசினார்.

மேலும், “இந்தியப் படைகளுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் கால அளவு குறைக்கப்பட வேண்டும்” என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே, ”முப்படைகளின் ஆயுத மற்றும் தளவாடத் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், படைகளின் திறனை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பம் உதவும்” எனவும் அவர் கூறினார்.

நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் கால தாமதம் செய்யக்கூடாது எனவும், அவ்வாறு செய்வதால் கொள்முதல் செய்யும்போது அது காலாவதியான தொழில்நுட்பமாகிவிடும் எனவும் இணை மந்திரி தெரிவித்தார்.

Similar News