செய்திகள்

அரசு மருத்துவமனையில் நான்கு கர்ப்பிணிப் பெண்களை ஒரே ஸ்டெச்சரில் ஏற்றிச் சென்ற அவலம்

Published On 2017-03-23 17:19 GMT   |   Update On 2017-03-23 17:19 GMT
கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள் நான்கு பேர் ஒரே ஸ்டெச்சரில் அமர வைத்து கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள் நான்கு பேர் ஒரே ஸ்டெச்சரில் அமர வைத்து கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று காலை அதிக அளவிலான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். மேலும், கர்ப்பிணிப் பெண்களும் தங்களது வழக்கமான பரிசோதனையை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது, மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்து ஸ்கேன் எடுப்பதற்கான மற்றொரு பகுதிக்கு நான்கு நிறை மாத கர்ப்பிணிப் பெண்களை ஒரே ஸ்டெச்சரில் அமர வைத்து மருத்துவமனை ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அரசு மருத்துவமனையின் அவல நிலையை அனைவரும் விமர்சிக்கத் தொடங்கினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ,” மருத்துவமனையில் போதுமான அளவிற்கு ஸ்டெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் உள்ளது. ஊழியரின் கவனக் குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது” எனக் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில சுகாதார அமைச்சர் ரமேஷ் குமார் ,” இது மிகவும் வருத்தமளிக்கும் நிகழ்வு. உடனடியாக இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Similar News