செய்திகள்

வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியாவதை தடுக்க குழு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-03-23 00:22 GMT   |   Update On 2017-03-23 00:22 GMT
சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாவதை தடுக்கக் முக்கிய வலைத்தளங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாவதை தடுக்கக் கோரி ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தது. அதில், “வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியாவதை தொழில்நுட்ப ரீதியாக தடுக்கவேண்டும். இதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.பி.லோக்குர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் கூகுள் இந்தியா, மைக்ரோ சாப்ட் இந்தியா, யாகூ இந்தியா, பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வலைத்தளங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த குழு அடுத்த 15 நாட்களுக்குள் சந்தித்து ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாவதை தடுக்க ஒரு தீர்வை காணவேண்டும் எனவும், இது பற்றி எடுக்கப்படும் முடிவை அடுத்த விசாரணையின்போது கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Similar News