செய்திகள்

கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆதார விலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2017-03-22 16:40 GMT   |   Update On 2017-03-22 16:40 GMT
எண்ணெய் எடுப்பதற்கான அரவை கொப்பரை தேங்காய் மற்றும் பந்து கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான ஆதாரவிலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

எண்ணெய் எடுப்பதற்கான அரவை கொப்பரை தேங்காய் மற்றும் பந்து கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான ஆதாரவிலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகர் புதுடெல்லியில் இன்று மாலை கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதன்படி, தேங்காய் எண்ணெய் எடுக்கத் தேவையான அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆதாரவிலையை ரூபாய் 5950-ல் இருந்து ரூபாய் 6500-ஆக உயர்த்தி வழங்கவும், பந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆதாரவிலையை ரூபாய் 6240-ல் இருந்து ரூபாய் 6785-ஆக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி மாநிலத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3128 வீடுகள் கட்டப்படுவதற்காக ரூபாய் 47 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்திருத்த மசோதா மற்றும் 1981-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நபர்டு (ஊரகப் பகுதிகள் வளர்ச்சி வங்கி) சட்டத்திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான சைபர் பாதுகாப்பு குறித்து போடப்பட்ட ஒப்பந்தச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Similar News