செய்திகள்

முஸ்லிம் மாணவிக்கு கல்வி கடன் வழங்க உதவி செய்த பிரதமர் மோடி

Published On 2017-03-21 06:48 GMT   |   Update On 2017-03-21 06:48 GMT
பிரதமர் மோடி, மாணவி சாராவுக்கு கல்வி கடன் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். விஜயா வங்கி மூலம் அந்த மாணவிக்கு உடனே ரூ.1.5 லட்சம் கொடுக்க உத்தரவிட்டார்.

பெங்களூர்:

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சுகர் டவுனில் வசித்து வருபவர் அப்துல் இலியாஸ்.

இவரது மகள் சாரா. இவர் கர்நாடகாவில் உள்ள பி.இ.எஸ். கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.

முதலாண்டு படிப்பை நிறைவு செய்துள்ள அவர் இரண்டாமாண்டு படிப்பைத் தொடர பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். வங்கிகளுக்கு சென்று கல்விக் கடன் கேட்டார். ஆனால் கடன் கொடுப்பது பற்றி அதிகாரிகள் உறுதியான பதிலை சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் மாணவி சாரா கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர், தனது குடும்பத்தின் ஏழ்மை சூழலை விளக்கி இருந்தார். மேலும் தனக்கு கல்வி கடன் கிடைக்க உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.


பிரதமர் அலுவலக அதிகாரிகள் இந்த கடிதம் பற்றிய தகவலை மோடி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

உடனே பிரதமர் மோடி, மாணவி சாராவுக்கு கல்வி கடன் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். விஜயா வங்கி மூலம் அந்த மாணவிக்கு உடனே ரூ.1.5 லட்சம் கொடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த ஏழை மாணவிக்கு உடனடியாக கல்விக்கடன் கிடைத்துள்ளது.

இது பற்றி மாணவி சாரா கூறுகையில், ‘‘நான் ஒரே ஒரு கடிதம்தான் எழுதினேன். பிரதமர் மோடி எனக்கு உதவி உள்ளார். அவரை நான் நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்புகிறேன்’’ என்றார்.

Similar News