செய்திகள்

மார்ச் 30-க்குள் நேரில் ஆஜராக வேண்டும்: ஜாகீர் நாயக்கிற்கு என்.ஐ.ஏ. மீண்டும் நோட்டீஸ்

Published On 2017-03-20 11:04 GMT   |   Update On 2017-03-20 11:04 GMT
சர்ச்சைக்குரிய மதபோதகரான ஜாகீர் நாயக் மார்ச் 30-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று என்.ஐ.ஏ. மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த 1–ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும் ஜாகீர் நாயக்கின் பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகளை மத்திய மற்றும் மராட்டிய மாநில புலனாய்வு போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் ஜாகீர் நாயக், இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுமாறு தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அத்துடன் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகரான ஜாகீர் நாயக் மார்ச் 30-ம் தேதிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று என்.ஐ.ஏ. மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பையில் உள்ள நாயக்கின் இல்லத்திற்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மார்ச் 14-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு நாயக்கிற்கு என்.ஐ.ஏ. முதல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில் தற்போது புது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியா வராமல் ஜாகீர் நாயக் சவுதி அரேபியாவிலேயே தங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Similar News