செய்திகள்

உத்தரகாண்ட் புதிய முதல்வர் யார்? - நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Published On 2017-03-16 11:40 GMT   |   Update On 2017-03-16 11:40 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க அரசு 18-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக நாளை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கின்றது.
டேராடூன்:

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது.

கோவா மாநில முதல்மந்திரியாக மனோகர் பாரிக்கர் மற்றும் மணிப்பூர் மாநில முதல்மந்திரியாக பிரேன் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் யார் முதல்வர்? என்ற கேள்விக்கு அக்கட்சி இன்னும் விடையளிக்கவில்லை.



கடந்த 12-ம் தேதி கூடிய பா.ஜ.க ஆட்சிமன்றக் குழு கூட்டத்திலும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான முதல்மந்திரி யார் என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் நாளை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல்வர் போட்டியில் இருக்கும் பட்சத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி புதிய முதல்வரை கட்சித் தலைமை தேர்ந்தெடுக்கும். நாளை தேர்ந்தெடுக்கப்படும் புதிய முதல்வர் வரும் 18-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Similar News