செய்திகள்

ஒரே தவணையில் கடன்களை திருப்பி செலுத்தத் தயார்: விஜய் மல்லையா

Published On 2017-03-10 09:47 GMT   |   Update On 2017-03-10 09:47 GMT
ஒரே தவணையில் வங்கிகளுக்கான கடன்களை திருப்பி செலுத்த தயார் என, தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்திருக்கிறார்.
புது டெல்லி;

தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் நாடு திரும்பி, தன் மீதுள்ள வழக்குகளை சந்திப்பதற்கு மறுத்து விட்டார்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த நிலையில், வங்கிகளுக்கான கடன்களை ஒரே தவணையில் திருப்பி செலுத்த தயார் என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் “ஒரே தவணையில் கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கொள்கை பொதுத்துறை வங்கிகளிடத்தில் உள்ளது. நூற்றுக்கணக்கான கடனாளிகள் இந்த முறையில் கடன்களை திருப்பி செலுத்தியுள்ளனர். அப்படியிருக்க எங்களுக்கு மட்டும் இது மறுக்கப்படுவது ஏன்?

உச்ச நீதிமன்றத்தில் இதற்கான கோரிக்கையை நாங்கள் வைத்தபோது வங்கிகள் அதனை பரிசீலனை செய்யாமலேயே நிராகரித்து விட்டன. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு வங்கிகளுக்கு, பேச்சுவார்த்தைக்கான அறிவுரைகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Similar News