செய்திகள்

தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடையா?: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2017-03-03 21:51 GMT   |   Update On 2017-03-03 21:51 GMT
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்கலாமா என்பது பற்றிய தனது பதிலை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் செய்திதொடர்பாளரும், வக்கீலுமான அசுவிணி குமார் உபாத்யாய், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கின் முக்கிய சாராம்சம்:-

* அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால், வாழ்நாளெல்லாம் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்பட்டு விடுகிறது.

* கிரிமினல் வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டால், எம்.எல்.ஏ., ஆகலாம். மந்திரியாகக்கூட ஆக முடியும்.

* அரசு, நீதித்துறை ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளுக்கு மாறுபட்ட விதிகளை நாம் அமல்படுத்த கூடாது.

* வாழ்நாளெல்லாம் தேர்தலில் நிற்பதற்கு அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்காதவரையில், அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் காகோய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிப்பதில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் 2 வார காலத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிப்பது பற்றியும், அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வயது வரம்பு கொண்டு வருவது குறித்தும் பதில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Similar News