செய்திகள்

மும்பை மாநகராட்சி தேர்தல் சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம்: காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு

Published On 2017-02-26 05:36 GMT   |   Update On 2017-02-26 05:36 GMT
மும்பை மாநகராட்சி தேர்தல் சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம் காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவை சேர்ந்த தேவேந்திரபட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருக்கிறார். பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி இங்கு நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் கருத்து வேறுபாடு காரணமாக பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் தனித்தனியே போட்டியிட்டன. இதில் பெரும்பாலான இடங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

மும்பை மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. சிவசேனா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா 84 இடங்களிலும், பா.ஜனதா 82 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களில் 3 பேர் சிவசேனாவில் இணைந்து உள்ளனர். ஆனாலும் மேயர் பதவியை பிடிக்க தேவையான 114 இடங்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கை இரு கட்சிகளுக்கும் கிடைக்காததால் மேயர் பதவியை பிடிப்பது யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவை சேர்ந்த ஒருவரே மேயர் பொறுப்பேற்பார் என்று அக்கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தெரிவித்து உள்ளார்.


இதனால் மும்பை மாநகராட்சி தேர்தலில் 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் ஆதரவை உத்தவ்தாக்கரே கேட்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கிடைத்தாலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த இடத்துக்கே மும்பை மாநகராட்சி மேயர் பதவி கிடைக்கும். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

மாநில நிர்வாகிகள் தங்களது கருத்தை காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிவிப்பார்கள். கட்சி மேலிடம் இறுதி முடிவை அறிவிக்கும்.

இந்த நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மும்பை நகர தலைவர் சஞ்சய் நிரூபம் கூறியதாவது:-

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றவோ அல்லது மேயர் பதவிக்கோ சிவசேனாவை காங்கிரஸ் ஆதரிக்காது. சிவசேனாவை எதிர்ப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்ற சிவசேனாவும் பா.ஜனதாவும் மீண்டும் கூட்டணி சேர்ந்து கொள்ளும். மாநகராட்சியில் எதிர்கட்சியாக செயல்பட காங்கிரஸ் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு மூத்த தலைவர் குருதாஸ்சாபத்தும் இதே கருத்தை தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பை மேயர் பதவிக்காக காங்கிரஸ் உதவியை நாடவில்லை என்று சிவசேனா மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி மேல்சபை எம்.பியுமான சஞ்சய்ரவுத் கூறியதாவது:-

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே சிவசேனாவை சேர்ந்தவர் தான் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவர். இது தொடர்பாக காங்கிரஸ் ஆதரவை நாங்கள் கேட்டதாக வெளியான தகவல் தவறானது.

மார்ச் 9-ந் தேதி (மேயர் தேர்தல் நடைபெறும் நாள்) வரை பொறுத்து இருந்தால் அதற்கான விடை அப்போது தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News