செய்திகள்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மேலும் 50 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு

Published On 2017-02-24 14:45 GMT   |   Update On 2017-02-24 14:45 GMT
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மேலும் 50 நாட்கள் நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்’ என்று பெயர்.

இந்நிலையில், தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 50 நாட்கள் இத்திட்டத்தினை நீட்டித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ''மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்தில் 150 நாள் வேலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கைப்படி கூடுதலாக 50 நாட்கள் வேலை தர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள குட்டைகள், ஏரிகள் தூர்வாரப்படும். பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் வேலை நாட்கள் நீட்டிப்பால் 1.23 கோடி கிராம தொழிலாளர்கள் பயன்பெறுவர்'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News