செய்திகள்

நாட்டிலேயே முதன் முறையாக பொதுத் தளத்தில் பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் - கேரள கவர்னர்

Published On 2017-02-23 12:07 GMT   |   Update On 2017-02-23 12:07 GMT
நாட்டிலேயே முதன் முறையாக கேரளாவில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பற்றிய விபரங்கள் பொதுத் தளத்தில் வைக்கப்படும் என கேரள கவர்னர் சதாசிவம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடிகை பாவனா, காருடன் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சில நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2017-ம் ஆண்டின் கேரள மாநில சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கேரள கவர்னர் சதாசிவம் உரையாற்றினார். அப்போது கவர்னர் உரையில் அவர் கூறியதாவது:-

கேரள அரசு பெண்கள் பாதுகாப்பின் மீது அதிக கவனம் மற்றும் அக்கறை கொண்டுள்ளது. பெண்கள் நலனுக்காக தனித் துறை உருவாக்கும் திட்டத்தை அரசு இறுதிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தாலுகாவிற்கும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் இதற்கான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கிராமப் புறங்களில் பெண் போலீசார்கள் அதிக அளவில் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்படும் பென்கள் மற்றும் சிறார்களுக்கு, நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுவதில் உள்ள தாமதங்கள் குறைக்கப்பட்டு, விரைவாக நிதியுதவி சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே முதன் முறையாக பாலியல் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பதிவு செய்து பொது வெளியில் வைக்கப்படும். இதனால், பாலியல் குற்றவாளிகளை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடந்து வரும் தொடர் பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்து, கவர்னர் உரையின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ‘பெண்களுக்கு கேரளாவில் பாதுகாப்பு இல்லை’ என்ற பேனரைப் பிடித்து அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Similar News