செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்பும் மோடியும் இரட்டை சகோதரர்கள்: லாலுபிரசாத் கிண்டல்

Published On 2017-02-22 05:41 GMT   |   Update On 2017-02-22 05:41 GMT
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பின் இரட்டை சகோதரர் போல் இருக்கிறார் என ஹர்ஜந்த்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது லாலுபிரசாத் யாதவ் பேசினார்.
லக்னோ:

ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி- காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் ஹர்ஜந்த்பூர் தொகுதியில் வேட்பாளர் ராகேஷ் சிங்குக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

உத்தரபிரதேச தேர்தலோடு பிரதமர் மோடியின் செல்வாக்கு முடிவுக்கு வந்து விடும். இங்கு பாரதிய ஜனதாவால் வெற்றி பெற முடியாது. மோடி தன்னை உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை என்று கூறி இருக்கிறார். அவரை இங்குள்ள மக்கள் தோற்கடித்து திருப்பி அனுப்புவார்கள்.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்து என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல் மோடி அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதும் யாருக்கும் தெரிவதில்லை. இந்த வி‌ஷயத்தில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பின் இரட்டை சகோதரர் போல் இருக்கிறார்.

பீகார் தேர்தலின் போது, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பல்வேறு சதிகள் மூலம் வெற்றி பெற முயற்சித்தார். ஆனால், அவருக்கு பீகார் மக்கள் சரியான பாடம் புகட்டினார்கள். அதே போல் உத்தரபிரதேசத்திலும் பாடம் புகட்ட வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் தோல்வி மூலம் மோடியின் அரசுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News