செய்திகள்

சுடுகாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு: பிரதமரின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Published On 2017-02-20 23:38 GMT   |   Update On 2017-02-20 23:38 GMT
சுடுகாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு குறித்து பிரதமரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சட்டசபை தேர்தலை அவர் மதரீதியாக மாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தின் பதேப்பூரில் நேற்றுமுன்தினம் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர், ‘கல்லறை தோட்டத்துக்காக ஒரு கிராமத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தால், சுடுகாட்டுக்காகவும் நிதி ஒதுக்க வேண்டும். ரம்ஜானுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கினால், ஹோலி பண்டிகைக்கும் வழங்க வேண்டும்’ என்று கூறியதாக தெரிகிறது.

பிரதமரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சட்டசபை தேர்தலை அவர் மதரீதியாக மாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தேர்தல் நடத்தை விதியை மீறும் செயல் எனறு கூறியுள்ள அந்த கட்சி, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘தேர்தல் களத்தில் தோல்வி கண்ட ஒரு தலைவர் மட்டுமே, தேர்தலை மதரீதியில் மாற்றும் வகையில் இப்படியான கருத்துகளை வெளியிடுவார். ஆனால் ராகுல்-அகிலேஷ் கூட்டணி மாநிலத்தின் வளர்ச்சி அடிப்படையில்தான் இந்த தேர்தலை சந்திக்கின்றது. இதை வாக்காளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்’ என்றார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 

Similar News