செய்திகள்
கொலை வழக்கில் கைதான மார்க்சிஸ்ட் தொண்டர்கள்.

கண்ணூர் அருகே பா.ஜனதா நிர்வாகி கொலையில் கம்யூ. தொண்டர்கள் 6 பேர் கைது

Published On 2017-01-22 05:24 GMT   |   Update On 2017-01-22 05:24 GMT
கண்ணூர் அருகே பாரதிய ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலசேரியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 52). தலசேரி பகுதி பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக இருந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது.

கடந்த வாரம் சந்தோஷ்குமார் வேலை வி‌ஷயமாக வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த அவரை வீடு அருகே ஒரு கும்பல் வழி மறித்தது. அவர்கள் திடீரென சந்தோஷ்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

சந்தோஷ்குமார் கொலைக்கு அரசியல் முன் விரோதமே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியினரும் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தனர். குற்றவாளிகளை கண்டு பிடிக்கக்கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து தலசேரி போலீஸ் சூப்பிரண்டு பிலிப் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சந்தோஷ்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.

நேற்று இது தொடர்பாக மலப்புரம் பகுதியைச் சேர்ந்த கம்யூ. தொண்டர்கள் 6 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சந்தோஷ் குமாரை அரசியல் முன் விரோதம் காரணமாக வெட்டி கொன்றதாக கூறினர்.

இதையடுத்து மலப்புரத்தைச் சேர்ந்த ரோகித் (26), மிதுன் (26), பிரஜித் (26), சமில் (26), ரெஜேஷ் (25), அஜேஷ் (25) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் தெரிவித்தனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News