செய்திகள்

குழந்தை திருமணம் நடைபெறாத மாநிலமாக கர்நாடகத்தை மாற்ற வேண்டும்: சித்தராமையா

Published On 2017-01-22 03:48 GMT   |   Update On 2017-01-22 03:48 GMT
அடுத்த 5 ஆண்டுகளில் குழந்தை திருமணம் நடைபெறாத மாநிலமாக கர்நாடகத்தை மாற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.
பெங்களூரு:

பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

நான் சிறுவயதில் இருந்த போது ஏராளமான குழந்தை திருமணங்கள் நடந்ததை பார்த்து இருக்கிறேன். கிராமப்புறங்களில் இதுபோன்ற திருமணங்கள் அதிகஅளவில் நடைபெற்றன. நமது நாட்டில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்யும் ஆணுக்கு 21 வயது நிரம்ப வேண்டும் என்றும், பெண்ணுக்கு 18 வயது நிரம்ப வேண்டும் என்றும் சட்டம் உள்ளது. உடல் மற்றும் மனவளர்ச்சியின் அடிப்படையிலேயே திருமண வயது முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சட்டவிதிகளை அனைவரும் கடை பிடிக்க வேண்டும்.

குழந்தைகளாக இருக்கும் போது, அதாவது அவர்கள் அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி மட்டும் அல்ல, சமூக ரீதியாகவும் பெரிய குற்றமாகும். இளம் வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால், அவர்களது எதிர்காலம் சீரழிந்துவிடும். இது அவர்களது வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். அதனால் இளம்வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதுபற்றி பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதையும் மீறி குழந்தை திருமணங்களை செய்து வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பற்றி தகவல் தெரிந்தால், அதுபற்றி பொதுமக்கள் உடனடியாக அரசுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கலாம். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் குழந்தை திருமணம் நடைபெறாத மாநிலமாக கர்நாடகத்தை மாற்ற வேண்டும். அதற்கு பெற்றோர் மற்றும் பெண் குழந்தைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். குழந்தை திருமணத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். தேசிய அளவிலான கருத்துக்கணிப்புப்படி முதலில் கர்நாடகத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது 41.2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 23.2 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் இது பூஜ்ஜியமாக மாற வேண்டும். பெண் குழந்தைகளை கொலை செய்வது, குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் உமாஸ்ரீ, ரோஷன் பெய்க், எச்.கே.பட்டீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News