செய்திகள்

இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் வரும்: ஜனாதிபதியை சந்தித்த பிறகு தம்பிதுரை பேட்டி

Published On 2017-01-21 10:04 GMT   |   Update On 2017-01-21 10:04 GMT
ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டம் இன்று மாலைக்குள் பிரகடனப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதியை சந்தித்த தம்பிதுரை எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.
புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற தடை காரணமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் கொதித்தெழுந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் வலுத்துள்ள நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்  செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவர், தமிழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாக கூறினார்.

பின்னர் தமிழக அரசு அளித்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. பின்னர் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் முறையிட்டனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டுக்கு வகை செய்யும் அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு அமலுக்கு வரும் என நம்புகிறேன்.

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அவசர சட்டம் கொண்டு வர ஆதரவு அளித்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. ஒரு நாடு, ஒரு வரி என்பது ஜி.எஸ்.டி.க்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஆனால், ஒரு மொழி ஒரு கலாச்சாரம் என்ற கோட்பாடு கூட்டாட்சிக்கு நல்லதல்ல.

காவேரி, முல்லைப்பெரியார், கச்சத்தீவு, தமிழக மீனவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழ் கலாச்சார குறியீடான ஜல்லிக்கட்டு என பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் எழுப்புகிறோம். தமிழ் கலாச்சாரமும் இந்திய கலாச்சாரம்தான். எனவே, மாநிலங்களின் அபிலாஷைகள் மற்றும் நலன்களை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டாம். இதை ஒரு எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News