செய்திகள்

சல்மான் கான் மான் வேட்டை வழக்கில் இன்று தீர்ப்பு

Published On 2017-01-18 06:06 GMT   |   Update On 2017-01-18 07:42 GMT
அனுமதி காலாவதியான துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது.

பின்னர், ஜாமினில் விடுதலையான நடிகர் சல்மான்கான், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது.

சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், இதே மான் வேட்டை சம்பவத்தில் அனுமதி காலாவதியான துப்பாக்கியை வைத்திருந்ததாக ஜோத்பூர் மாவட்ட கோர்ட்டில் வனத்துறையினர் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் வாதப் பிரதிவாதங்கள் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது.

இதையடுத்து, இவ்வழக்கில் வரும் 18-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் தல்பட் சிங் ராஜ்புரோஹித் அறிவித்திருந்தார். தீர்ப்பு வெளியாகும்போது சல்மான் கான் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதாலும், சல்மான் கான் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிலும், கோர்ட் வளாகத்தை சுற்றிலும் ஏராளமான ஊடக நிருபர்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர்.

அப்பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு சல்மானுக்கு பாதகமாக அமைந்தால் அவர் அதிகபட்சமாக 7 ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கலாம் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

Similar News