செய்திகள்

வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

Published On 2017-01-11 07:23 GMT   |   Update On 2017-01-11 07:23 GMT
வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க 3 விதமான பரிந்துரைகளை பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:

வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க 3 விதமான பரிந்துரைகளை பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பி உள்ளது.

மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வரி சீரமைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதில் முக்கியமாக எதிர்பார்ப்பது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆகும். மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பை தொடர்ந்து பணப்புழக்கம் குறைந்து பணவீக்கமும் குறைந்து வருவதாக மத்திய அரசின் பொருளாதார புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே வருமானவரி செலுத்துவோருக்கு சலுகைகள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே பிரதமர் மோடியும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுகிறது.

தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சமாகவும் உச்சவரம்பு உள்ளது.

இந்த உச்சவரம்பை ரூ.3½ லட்சம், ரூ.4½ லட்சம், ரூ.5 லட்சம் என 3 பிரிவாக உயர்த்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கும் நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதில் பிரதமர் அலுவலகம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரி விதிப்பு தொடர்பாக நிதி அமைச்சகம் எடுக்கும் அனைத்து பரிந்துரைகளையும் பிரதமர் அலுவலகம் தீவிரமாக பரிசீலிக்கவும் முடிவு செய்துள்ளது.

வரிவசூல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதத்தில் முந்தைய ஆண்டை விட 12.01 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மறைமுக வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார்.

எனவே இந்த ஆண்டு வருமான வரிவிலக்கு உச்சவரம்பை இரு மடங்காக அதாவது ரூ.5 லட்சமாக அதிகரிக்கலாம் என்று வருமான வரி ஆலோசகர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர். இதே போல் கார்பரேட் நிறுவனங்களின் வருமான வரி 1.5 சதவீதம் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News