செய்திகள்

ஏப்ரல் 1-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை டெபாசிட் கணக்குகளை தாக்கல் செய்ய வங்கிகளுக்கு உத்தரவு

Published On 2017-01-08 11:39 GMT   |   Update On 2017-01-08 11:39 GMT
ஏப்ரல் 1-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரையிலான டெபாசிட் கணக்குகளை தாக்கல் செய்யுமாறு வங்கிகளுக்கு வருமான வரித்துறை உத்தர விட்டுள்ளது.

புதுடெல்லி:

கறுப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.

இதில் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யும் பணத்துக்கு வருமான வரித்துறையினர் கணக்கு கேட்பார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் அதிகமாக பணம் பதுக்கியவர்கள் ஏழைகளின் வங்கி கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்து இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே டிசம்பர் 31-ந்தேதியுடன் காலக்கெடு நிறைவடைந்ததை தொடர்ந்து வருமான வரித்துறை விசாரணையை தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக வருமானவரித்துறை சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 9- ந் தேதி வரை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்களின் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

கணக்குகள் தாக்கல் செய்த பின்பு அதிக அளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள் குறித்து வருமான வரித்துறை விசாரணையில் இறங்கும் என்று கூறப்படுகிறது.

Similar News