செய்திகள்

ஆசிரியர்- பெற்றோர் கலந்தாய்வுக்கு தந்தை வராததால் மூன்றாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Published On 2017-01-07 07:19 GMT   |   Update On 2017-01-07 07:19 GMT
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்- பெற்றோர் கலந்தாவுக்கு தந்தை வராததால் 7 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூர்:

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்வானி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிறகு முதல் மனைவியையும், பிள்ளைகளையும் புறக்கணித்து வந்தார்.

இதனால் வேதனை அடைந்த குழந்தைகளின் தாயார், தனது இரு பிள்ளைகளையும் சகோதரரிடம் ஒப்படைத்து, அவர்களை உறைவிடப் பள்ளியில் சேர்த்து பராமரித்து வந்தார்.

அவர்களில் மூன்றாம் வகுப்பில் படித்துவந்த 7 வயது சிறுவன் சிவம் சிங், அவ்வப்போது பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்- பெற்றோர் கலந்தாய்வுக்கு தனது தந்தை வராததால் மிகுந்த வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உறைவிடப் பள்ளியில் இருந்து விடுமுறையில் தனது மாமாவின் வீட்டுக்கு வந்திருந்த சிவம் சிங், நேற்று வீட்டில் யாருமில்லாதபோது சமையல் அறையில் ஒரு துணியில் தூக்கிட்டு பிணமாக தொங்கினார்.

இந்த கோரச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News