செய்திகள்

உத்தரகாண்ட், மணிப்பூரில் முதல் முறையாக வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்கள் புகைப்படம்

Published On 2017-01-05 10:45 GMT   |   Update On 2017-01-05 10:45 GMT
உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் பொருத்தப்படுகிறது.
இம்பால்:

மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் தலைமை தேர்தல் அதிகாரி வி.கே.தேவாங்கன் இம்பாலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், வேட்பாளர்களின் புகைப்படம் பொருத்தப்பட உள்ளது. முதல் முறையாக இந்த ஏற்பாடு இரண்டு மாநிலங்களிலும் செய்யப்படுகிறது.

60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு மார்ச் 4 மற்றும் மார்ச் 8 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் 18,07,843 வாக்காளர்கள் உள்ளனர். 2794 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News