செய்திகள்

உ.பி.: வங்கிகளில் வரிசையில் நின்று இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்

Published On 2016-12-08 04:49 GMT   |   Update On 2016-12-08 04:49 GMT
வங்கிகளில் பணம் எடுக்க கியூவில் நின்று உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
லக்னோ:

வங்கிகளில் பணம் எடுக்க கியூவில் நின்று தாக்குபிடிக்க முடியாமல் நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல உத்தரபிரதேச மாநிலத்திலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவ்வாறு உயிரிழந்து குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். வங்கிகளில் கியூவில் நின்று இறந்தவர்கள் குடும்பத்துக்கு நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் தான் முதன் முதலாக பண உதவி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் பெண் ஒருவர் சேமித்து வைத்த பணத்தை வங்கியில் மாற்ற முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவி வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

அதேபோல கசாஞ்சிநாத் என்ற இடத்தில் கியூவில் நின்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ரூ.1 லட்சம் நிதி உதவியையும் அவர் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் வங்கிகளில் பணம் எடுக்க தொடர்ந்து கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிறது. ஆக்ராவில் ஒரு வங்கியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென வங்கியில் பணம் இல்லை என்று அறிவித்தார்கள். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் வங்கி மீது கல்வீசி தாக்கினார்கள். இதை தடுக்க முயன்ற போலீசார் மீதும் கல்வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார்.

பகிரத் பூர் என்ற இடத்தில் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News