செய்திகள்

மக்களவையை முறையாக நடத்தவில்லை: சபாநாயகர், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி மீது அத்வானி அதிருப்தி

Published On 2016-12-07 14:50 GMT   |   Update On 2016-12-07 14:50 GMT
பாராளுமன்ற மக்களவையை சபாநாயகரோ பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரியோ முறையாக நடத்தவில்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி அதிருப்தியுடன் கூறினார்.
புதுடெல்லி: 

ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுவருவதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் பெரும்பகுதியை எதிர்க்கட்சிகள் வீணடித்துள்ளன. 

தினமும் வழக்கமாக பாராளுமன்றம் கூடுவதும், அமளி காரணமாக படிப்படியாக அவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைப்பதும் வழக்கமாகிவிட்டது.  

இன்று பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்து கடும் கோபம் அடைந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அவையை முறையாக நடத்தவில்லை என சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார் ஆகியோரை குறைகூறினார்.  அவரை ஆனந்த் குமார் சமாதானப்படுத்த முயன்றார். 

அப்போது, ‘சபாநாயகர் இந்த அவையை சரியாக நடத்தவில்லை என்று அவரிடம் சொல்லப்போகிறேன். வெளிப்படையாகவும் தெரிவிப்பேன்’ என்றார் அத்வானி. 

உணவு இடைவேளைக்கு முன்பாக அவை நடவடிக்கையை ஒத்திவைக்கப்பட்டபோது, மக்களவை அதிகாரி ஒருவரிடம், எத்தனை மணி வரை அவைஒத்திவைக்கப்பட்டது? என்று அத்வானி கேட்டார். அதற்கு அந்த அதிகாரி பிற்பகல் 2 மணி வரை என்று கூறினார். 

இதனால், கடிந்துகொண்ட அத்வானி, ‘ஏன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க வேண்டியதுதானே?’ என்றார். 

ஆனால், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால் வேதனை அடைந்த அத்வானி இவ்வாறு குறிப்பிட்டதாக மத்திய மந்திரிகள் தெரிவிக்கின்றனர். 

Similar News