செய்திகள்

ஜெயலலிதா ஆத்மா சாந்தியடைய சபரிமலையில் அஸ்த்ர பூஜை

Published On 2016-12-07 05:54 GMT   |   Update On 2016-12-07 05:54 GMT
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடைய அஸ்த்ர பூஜை நடத்தப்பட்டது.
திருவனந்தபுரம்:

சபரிமலையில் தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அங்கு அலை மோதுகிறது.

சபரிமலைக்கு பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வருகை தந்தாலும் தமிழகத்தில் இருந்து செல்லும் அய்யப்ப பக்தர்கள் எண்ணிக்கைதான் மிகவும் அதிகமாகும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 1-ந்தேதி கோவில் நடை திறந்ததில் இருந்து சபரிமலை சென்ற தமிழக அய்யப்ப பக்தர்கள் ஜெயலலிதா நலம்பெற வேண்டும் என்று சுவாமி அய்யப்பனிடம் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணமடைந்த தகவல் கிடைத்ததும் தமிழக அய்யப்ப பக்தர்கள் இடையே சோகம் ஏற்பட்டது. அவர்கள் கண்ணீர்மல்க சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பியதை காணமுடிந்தது. சபரி மலையில் நேற்று தமிழக பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடைய அஸ்த்ர பூஜை நேற்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

இதையொட்டி நடந்த ஹோமத்தில் தேவசம்போர்டு தலைவர் பிராயர் கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இது பற்றி பிராயர் கோபால கிருஷ்ணன் கூறும்போது ‘‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த தெய்வ பக்திகொண்டவர். அவரது ஆத்மா சாந்தியடைவதற்காக இந்த அஸ்த்ர பூஜை நடத்தப்பட்டது. தமிழக பக்தர்கள் அதிகளவு சபரிமலை வருகை தருகிறார்கள். அவர்கள் கடந்த பல நாட்களாக ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்ததும் அனைவருக்கும் தெரியும்’’ என்றார்.

Similar News