செய்திகள்

90 சதவீத இந்திய மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார் மோடி: மாயாவதி

Published On 2016-12-07 05:02 GMT   |   Update On 2016-12-07 05:02 GMT
பிரதமர் மோடியின் பணக்கார நண்பர்கள் தவிர, நாட்டில் உள்ள 90 சதவீத இந்திய மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை இக்கட்டான நேரத்தில் உரிய முன்னேற்பாடுகள் செய்யாமல் கையில் எடுத்துள்ளார்.

இதன் மூலம் மக்கள் கடும் துன்பத்தை சந்தித்து வருகிறார்கள். டாக்டர்களுக்கு பணம் செலுத்த முடியாமல் பலர் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். மாணவர்களால் உரிய நேரத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. பல ஏழைகள் தங்கள் வீட்டு திருமணத்தை ரத்து செய்துள்ளனர். அல்லது தள்ளி வைத்துள்ளனர். விவசாயிகளால் விதை, உரம், பூச்சி மருந்துகள் வாங்க முடியவில்லை.

பிரதமர் மோடியின் பணக்கார நண்பர்கள் தவிர, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனது பணக்கார நண்பர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை 10 மாதத்துக்கு முன்பே செய்து விட்டு திடீரென ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டார்.

இதன் மூலம் அவர் 90 சதவீத மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கி இருக்கிறார்.

உத்தரபிரதேச மாநில தேர்தலில் நீங்கள் எனக்கு முழு மெஜாரிட்டி அளித்தால் சிறந்த அரசை அளிப்பேன். முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நிதி சம்பந்தமாக எடுத்த அனைத்து முடிவுகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடுவேன். குற்றவாளிகளும், ஊழல்வாதிகளும் ஜெயிலுக்கு செல்வார்கள். நான் கொண்டு வந்த முக்கியமான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்து விட்டார்.

லக்னோவில் பூங்கா அமைத்தது தொடர்பாகவும், யானை சிலைகளை வைத்ததற்காகவும் அகிலேஷ் யாதவ் குறை சொல்கிறார்.

இந்த பூங்கா மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறி இருக்கிறது. இதன் மூலம் மாநிலத்துக்கு வருவாய் வருகிறது. அகிலேஷ் யாதவ் இன்னும் குழந்தை தனமாகவே இருக்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியை பற்றி மாயாவதி விமர்சித்தது தொடர்பாக மாநில பாரதீய ஜனதா தலைவர் கேசவ் குமார் மவுரியாவிடம் கேட்ட போது, மாயாவதிக்கு ‘மோடி பயம்’ பிடித்து விட்டது. எனவே, எதையாவது கூறி கொண்டு இருக்கிறார் என்றார்.

Similar News