செய்திகள்

உயர்மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு பின் ரூ.130 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்

Published On 2016-12-06 21:30 GMT   |   Update On 2016-12-06 21:30 GMT
உயர்மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு பின்னர் ரூ.130 கோடி ரொக்கம், நகைகளை பறிமுதல் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி:

உயர்மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு பின்னர் ரூ.130 கோடி ரொக்கம், நகைகளை பறிமுதல் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வருமான வரித்துறையின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நவம்பர் 8-ந் தேதி மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் 400 விவகாரங்களில் வருமான வரித்துறை அதிரடி விசாரணை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து மோசடி கண்டுபிடிக்கப்பட்ட விவகாரங்களில் வருமான வரித்துறை, மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம், சி.பி.ஐ. சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தை தாண்டி மிக தீவிரமான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அத்தகைய விவகாரங்களில், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும், சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வது என மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தீர்மானித்துள்ளது.

மேலும் ரூ.130 கோடிக்கும் மேலான ரொக்கப்பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள் இருப்பதை வரி செலுத்துபவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ரூ.14 லட்சம் கோடி அளவுக்கு புழக்கத்தில் இருந்தன. அவற்றில் கடந்த மாதம் 27-ந் தேதி நிலவரப்படி சுமார் ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் ரூ.80 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு பகுதியில் 18 விவகாரங்களில் விசாரணை நடத்துமாறு மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் கேட்கப்பட்டுள்ளது.

Similar News